தமிழக எம்.பி.,க்களுடன் பாஜக கூட்டு: டெரெக் ஓ பிரைன் குற்றச்சாட்டு

 

தமிழக எம்.பி.,க்களுடன் பாஜக கூட்டு: டெரெக் ஓ பிரைன் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை முடக்க தமிழக எம்.பி.,-க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரைன் குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லி: நாடாளுமன்றத்தை முடக்க தமிழக எம்.பி.,-க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரைன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற அவைகளில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,-க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்றம் இன்று கூடிய போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை முடக்க தமிழக எம்.பி.,-க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரைன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றம் நடைபெறாமல் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்க தமிழக எம்.பி.,-க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது. விவாதிப்பதில் இருந்தும், கடுமையான கேள்விகளுக்கு பதில் சொல்வதில் இருந்தும் அரசு ஓடி ஒளிகிறது. இது மேட்ச் பிக்ஸிங்” என்று பதிவிட்டுள்ளார்.