தமிழக அரசு விளம்பரத்திற்காக நிவாரண பணிகள் செய்கிறது: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

 

தமிழக அரசு விளம்பரத்திற்காக நிவாரண பணிகள் செய்கிறது: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரண பணிகளை தமிழக அரசு விளம்பரத்திற்காக செய்கிறது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: கஜா புயல் நிவாரண பணிகளை தமிழக அரசு விளம்பரத்திற்காக செய்கிறது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.

தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழனிசாமி அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதியில் நிற்கும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய நிவாரண பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்?

அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும். மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும் என கூறியுள்ளார்.