தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திடீர் ராஜினாமா

 

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திடீர் ராஜினாமா

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

சென்னை: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாரயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக தற்போதைய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஒசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை இழக்கும் நிலைக்கு அமைச்சர் தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், தன் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி தற்போது ராஜினாமா செய்துள்ளார்.