தமிழகத்தை நோக்கி வரும் புயல்? சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தை நோக்கி வரும் புயல்? சென்னை வானிலை ஆய்வு மையம்

மத்திய அந்தமான் பகுதிகளின் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப் பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: மத்திய அந்தமான் பகுதிகளின் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப் பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தாய்லாந்து வளைகுடா பகுதிகளில் நேற்று நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய அந்தமான் பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த நிலையானது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள கணிப்புகளின் அடிப்படையில் தமிழகம் நோக்கி வரும் என்று முழுமையாக கூற முடியாது. காற்றழுத்த பகுதியின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

குமரிக்கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 24மணி நேரத்தில் தமிழகத்தில் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல், தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்தமான்,தென் கிழக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்ட சீர்காழியில் தலா 7செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது, மேலும் திருவாரூர் மாவட்டன் நன்னிலத்தில் தலா 5செ.மீட்டர் மழையும், அதே மாவட்டத்தில் உள்ள கொடவாசலில் தலா 4செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்,கடலூர் சிதம்பரம்,பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 3செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றார்.