தமிழகத்தை நெருங்கும் கஜா புயல்; மாமனார் வீட்டிற்கு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி!

 

தமிழகத்தை நெருங்கும் கஜா புயல்; மாமனார் வீட்டிற்கு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி!

கஜா புயல் தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம்: கஜா புயல் தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயலானது, மணிக்கு 22 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இந்த புயல் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இப்படி இருக்க, இது அனைத்தில் இருந்தும் எந்த பாதிப்பும் இன்றி மக்களை காப்பற்ற, முன் நின்று பணியாற்ற வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என விசாரித்தோம்.

சேமூர் அம்மாபாளையத்தில் உள்ள அவரின் மாமனார் மற்றும் அவர் பங்காளிகளுக்குச் சொந்தமான குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சேமூர் வரை, வழி நெடுகிலும் “எங்க ஊரு மருமகனே வருக! வருக!!!” என பேனர்கள் வைத்து அசத்தியுள்ளனர் மாமனார் வீட்டார்கள்.

அதை எல்லாம் ரசித்த வண்ணம் சரியாக காலை 8 மணிக்கு கோயில் வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் வெளியே வந்த ‘மாண்புமிகு’ எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்ட போது, “நான் இன்னும் ரெண்டு நாள் சேலத்தில்தான் இருப்பேன். நாளை பேட்டி கொடுக்கிறேன்” என கூறியபடி தன் மாமனார் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், அச்சத்தில் உறைந்திருக்கும் தமிழக மக்களுக்கு தைரியம் கொடுக்கும் இடத்தில் இருக்கும் முதலமைச்சரின் இந்த மெத்தனப் போக்கு, மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.