தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் 4  மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும் மாலை  மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை: நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும் மாலை  மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அடையாறு, வடபழனி, பம்மல், மீனம்பாக்கம், கோயம்பேடு, போரூர், குரோம்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

rain

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல் சேலம், கடலூர் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது.

rain

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, தேனி, திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.