தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

 

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை: தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல வரைமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் வருகிற மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் 25 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வு அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகியவை உள்ளன.

ttn

கீழ்க்கண்ட சில தளர்வுகள் 25 மாவட்டங்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது.

இம்மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் இ-பாஸ் இல்லாமல் இயக்கலாம். கொரோனா பரவுவதை தடுக்க அனுமதிக்கப்பட்ட பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர மக்கள் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறையையே பின்பற்ற வேண்டும். அரசுப்பணி மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வாங்கி இயக்கப்படும் பேருந்துகளில் அதிகபட்சம் 20 நபர்களும், வேன்களில் அதிகபட்சம் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் ஓட்டுனர் தவிர 2 நபர்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 100 சதவீத பணியாளர்கள் கொண்டு இயங்கலாம். சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் 100 பேருக்கு மேல் பணியாளர்கள் எண்ணிக்கை இருந்தால் 50 சதவீதம் அல்லது குறைந்தது 100 பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

100 பேருக்கு கீழ் பணியாளர்கள் எண்ணிக்கை இருந்தால் அத்தகைய தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மூடப்பட்டுள்ள தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் இ-பாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவர பயன்படுத்தப்படும் டாக்சி மற்றும் ஆட்டோவுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.