தமிழகத்தில் டன் கணக்கில் மீன்கள் தேக்கம் | விரக்தியில் மீனவர்கள்!

 

தமிழகத்தில் டன் கணக்கில் மீன்கள் தேக்கம் | விரக்தியில் மீனவர்கள்!

கடலோடு தினந்தோறும் போராடி உப்புக் காற்றை சுவாசித்து வாழ்ந்து வரும் தமிழக மீனவர்களின் வாழ்வில் தினம் தினம் போராட்டம் தான் போல. எல்லை தாண்டி சென்றார்கள் என்று அவ்வப்போது தீபாவளிக்கு பட்டாசு சுடுவதைப் போல பக்கத்து நாடுகளில் இருந்து சுட்டுப் போட்டாலும் கேட்க யாருமற்ற நிலையில் தான் இருக்கிறது மீனவர்களின் வாழ்வாதாரம். இதற்கிடையில், மீனவர்கள் கைது, மீன்பிடி வலைகளை அறுப்பதும், பிடிங்கிக் கொள்வதும் என்று வெளியே தெரியாத தொல்லைகள் இன்னமும் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

fish

இந்நிலையில் புதிதாக  அரவை ஆலைகளுக்கு புதிதாய் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை அரசு விதித்துள்ளதால் மறைமுகமாக மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு மீனவர்கள் அதிக அளவில் ஏற்றுமதி ரகமான முதல் தர கணவாய் மீன்கள் மற்றும் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் இரண்டாம் ரக கழிவு மீன்களை பிடித்து வருகின்றனர். 

fish

கடந்த சில நாட்களாக கணவாய் மீன்கள் வரத்து குறைந்ததால், அதிக அளவு இரண்டாம் ரக மீன்களை பிடித்து வந்தனர். இந்நிலையில் இரண்டாம் ரக மீன்களை வாங்கி மீன் எண்ணை மற்றும் கோழித் தீவனங்களாக மாற்றும் அரவை ஆலைகளுக்கு, அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் இந்த இரண்டாம் தர மீன்களை வாங்க ஆலைகள் சார்பாக யாரும் முன் வரவில்லை. இதனால் துறைமுக வளாகத்தில் இரண்டாம் தர மீன்கள் மலைபோல் குவிக்கப்பட்டு வருகின்றன. விற்பனை ஆகாமல் மீன்கள் அழுகி வருவதால் 6 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வரி விதிப்பை குறைத்து, மீனவர்களின் இழப்பை சரி செய்ய முன் வர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.