தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது: பாஜக அறிவிப்பு

 

தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது: பாஜக அறிவிப்பு

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்

சென்னை: தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்துள்ளன.

இந்நிலையில், புதுச்சேரியில் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது போல, இந்த தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.