தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகவுக்கு பிரதமர் மோடி மறைமுக அழைப்பு?

 

தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகவுக்கு பிரதமர் மோடி மறைமுக அழைப்பு?

தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, பழைய நண்பர்களை வரவேற்க தயார் என தெரிவித்துள்ளார்

புதுதில்லி: தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, பழைய நண்பர்களை வரவேற்க தயார் என தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக வசமிருந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் காங்கிரஸ் இடம் சென்றது அக்கட்சியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் தமிழக பாஜக நிர்வாகிகளிடமும் தொகுதி வாரியாக அவர் கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், அரக்கோணம் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது தமிழக மக்களுக்கு அவர் தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் தமிழகத்தில் யாருடன் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி, தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜக-வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பாஜக செயல்படும். அரசியல் பிரச்னைகள் எத்தனை இருந்தாலும் வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணியே. நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை.

மத்தியில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணியுடனே பாஜக ஆட்சி அமையும். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பாஜக தயாராக உள்ளது என்றார்.