தமிழகத்தில் கலக்கும் இட்லி சந்தை! மலேசியா வரை வியாபாரத்தில் கலக்குகிறது!

 

தமிழகத்தில் கலக்கும் இட்லி சந்தை! மலேசியா வரை வியாபாரத்தில் கலக்குகிறது!

ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, மீன் சந்தை, பூச்சந்தை, காய்கறி சந்தை, வார சந்தை எல்லாம் கேள்வி பட்டிருக்கிறோம். இதைப் போலவே நம்ம இட்லிக்கும் தமிழகத்தில் தனியாக சந்தை இருக்கு தெரியுமா? இங்கு நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் இட்லிகள் தயாராகிறது…

ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, மீன் சந்தை, பூச்சந்தை, காய்கறி சந்தை, வார சந்தை எல்லாம் கேள்வி பட்டிருக்கிறோம். இதைப் போலவே நம்ம இட்லிக்கும் தமிழகத்தில் தனியாக சந்தை இருக்கு தெரியுமா? இங்கு நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் இட்லிகள் தயாராகிறது…

idly

என்ன தான் பாஸ்ட் புட் கலாசாரங்கள்  கொடிகட்டிப் பறந்தாலும், நம்மளோட பாரம்பரிய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதுமே எப்போதும் தனி மரியாதை உண்டு. கிளிண்டன் இந்தியா வந்தாலும் சரி.. எலிசபெத் ராணி விசிட் செய்தாலும் சரி… இட்லியையும், சாம்பாரையும் ரசிச்சு சாப்பிட்டேன்னு ‘உச்’கொட்டி சொல்லிட்டு தான் போவாங்க! அப்படி, மக்களின் மனதில் தனி இடம் பிடித்த ஓர் உணவுப் பொருள் உண்டென்றால் அது இட்லி, சட்னி, சாம்பார் தான்!

இவ்வளவு ஏன்… நம்ம நாட்டைச் சேர்ந்தவங்களே வெளிநாட்டுக்குப் போனாலும், சாம்பாரையும், இட்லியையும் அடுத்த நாளே தேட ஆரம்பிச்சுடறோம். அந்தளவுக்கு அனைவருக்கும் பிடித்த, எளிதில் ஜீரணமாகக் கூடிய அரிசி மாவினால் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது இந்த பாரம்பரியமிக்க இட்லி சந்தை. இந்த சந்தையில், நாளொன்றுக்கு சாதாரணமாகவே சுமார் 20 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது. அதிலும் ஸ்பெஷல் ஆர்டர் என்றால் இட்லி விற்பனை லட்சங்களைத் தொடுமாம். மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கே இங்கிருந்துதான் இட்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ஆச்சரியமான உண்மை. 
தினமும் அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் இவர்களது இட்லி வியாபாரம் இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. மொத்த ஆர்டரின் பேரில் இட்லிகளை தயாரித்து விற்பனை செய்யும் இவர்கள், சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

idly

சாதா இட்லி, மினி இட்லி, ரவா இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பெங்களூரு இட்லி என இவர்களிடம் இட்லியிலேயே பல்வேறு வெரைட்டிகள் கிடைக்கிறது. சட்னியும் பல்வேறு ரகங்களில், சுவைகளில் தரமாக கிடைக்கிறது. தலைமுறைகளைக் கடந்து நடைபெறும் இந்த இட்லி சந்தையில் ஓர் இட்லி 50 பைசா என தொடங்கிய வியாபாரம், தற்போது பல்வேறு ரக சட்னிகளுடன் ஓர் இட்லி ரூ. 6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வரும் ரவி இட்லிஸ் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மாரிமுத்து நம்மிடம் கூறியதாவது,

idly

”நாங்கள் இப்பகுதியில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறோம். முழுக்க முழுக்க மனித சக்தியினால் சாதாரண விறகு அடுப்பில், ஓர் ஈடுக்கு (அதாவது 1 கொப்பரை) 100 இட்லி என 10 பானைகளில் ஆயிரம் இட்லிகளை அவிப்போம்.
பொதுவாக அரசியல் கட்சியினர், கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் என எங்களிடம் மொத்தமாக ஆர்டர் செய்பவர்களுக்கு நாங்கள் மொத்தமாக இட்லிகளை தயாரித்து கொடுப்போம். மேலும், இட்லிக்கேற்ற வகையில் தக்காளி, தேங்காய் சட்னி. சாம்பார், இட்லிப் பொடி என அனைத்துப் பொருட்களையும் பாரம்பரிய முறைப்படி தயாரித்து கொடுப்போம். இங்கு ஏராளமான இட்லிக் கடைகள் காலங்காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர். ஈரோடு பக்கம் போனீங்கன்னா அப்படியே கொஞ்சம் இந்த இட்லி சந்தைக்கும் போய் 4 இட்லியை ருசி பார்த்துட்டு வாங்க!