தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து கடந்த அக்டோபர்  24-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவி வரும் சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல்  தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் காலம் தாழ்த்தி வருவது கடுமையான விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதமே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை ஏன் நடத்தவில்லை? என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியது. மேலும் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும், இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் 4 வார காலத்திற்குள் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.