தமிழகத்தில்… அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

 

தமிழகத்தில்… அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் காலையில் வெயில் மக்களை சுட்டெரித்த நிலையில் இன்று மாலையில் திடீரென்று இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராயநகர், அடையாறு என நகரிலும், தாம்பரம் , குரேம்பேட்டை உள்ளிட்ட புறநகரிலும் மழை பெய்தது.

சென்னையில் காலையில் வெயில் மக்களை சுட்டெரித்த நிலையில் இன்று மாலையில் திடீரென்று இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராயநகர், அடையாறு என நகரிலும், தாம்பரம் , குரேம்பேட்டை உள்ளிட்ட புறநகரிலும் மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், அரிமளத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும், செட்டிகுளம், மயிலாடு துறையில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதன்  காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல ஊர்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதே போன்று அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 

rain

சென்னை நகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வங்க கடலில் தென்கிழக்கு மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வருகிற 2-ஆம் தேதி அன்று வலுப்பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 72 மணி நேரத்தில் அந்தமான் நிகோபர், கேரளா மற்றும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

மேலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் அந்த பகுதிகளுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும்,  மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் அந்த பகுதிகளுக்கும் மீனவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.