தமிழகத்திற்கு ரூ 10 கோடி நிதியுதவி: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

 

தமிழகத்திற்கு ரூ 10 கோடி நிதியுதவி: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ 10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ 10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கஜா புயலின் அசுர கரங்கள் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை அலசி போட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏறத்தாழ ரூ 10,000 கோடிக்கும் மேல் அம்மாவட்டங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி ரூ 15,000 கோடி நிதி கேட்டார். ஆனால் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ 200 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் மத்திய குழுவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியது.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் செய்திருக்கும் ட்வீட்டில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவிக்கிறோம். புதன் கிழமை சேர்ந்த அமைச்சரவை அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு கொண்டோம். உணவு, துணி, ஆடைகள் உட்பட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்தோம் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு ட்வீட்டில், ஆறு மருத்துவ குழுக்களும் கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்தோம் எனவும் பதிவிட்டிருக்கிறார்.