தப்பி பிழைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்தது…

 

தப்பி பிழைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்தது…

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மத்திய நிதியமைச்சர் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நல்ல முன்னேற்றம் கண்டது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், வேதாந்தா, யெஸ் பேங்க், ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி. மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், எல் அண்டு டி மற்றும் கோடக்பேங்க் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,322 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,128 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 133 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.94 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.136.63 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.23 புள்ளிகள் உயர்ந்து 36,701.16 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 88 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,829.35 புள்ளிகளில் நிலை கொண்டது.