தப்பி பிழைத்த காளை! சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்து…

 

தப்பி பிழைத்த காளை! சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்து…

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் சர்வதேச நிலவரங்களால் வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. 2018 மே மாதத்துக்கு பிறகு, கடந்த ஜூன் மாதத்தில்தான் இந்தியாவின் சேவை துறைகள் நடவடிக்கை பின்னடைவை சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியானது. இது பங்கு வர்த்தகத்துக்கு பாதகமாக அமைந்தது.

பங்கு வர்த்தகம்

இருப்பினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். மேலும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் பங்குச் சந்தைகளை சரிவில் இருந்து காப்பாற்றின.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐ.டி.சி., எல் அண்டு டி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா, வேதாந்தா, இன்போசிஸ், யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ் உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்கின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிந்தது.

பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் 1,314 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,165 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 172 நிறுவன பங்குகளின் விலை மாற்றம் இன்று முடிவடைந்தது. இச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.15 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.03 லட்சம் கோடியாக இருந்தது. 

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 22.77 புள்ளிகள் உயர்ந்து 39,839.25 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,916.75 புள்ளிகளில் நிலை கொண்டது.