தப்பிக்கவே முடியாது…. அனில் அம்பானி ராஜினாமாவை ஏற்க மறுத்த கடன்தாரர்கள் கமிட்டி….

 

தப்பிக்கவே முடியாது…. அனில் அம்பானி ராஜினாமாவை ஏற்க மறுத்த கடன்தாரர்கள் கமிட்டி….

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனத்தின் இயக்குனர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்ததை ஏற்று கொள்ள மறுத்து விட்டது அந்நிறுவனத்துக்கு கடன் கொடுத்த கடன்தாரர்கள் கமிட்டி.

அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தற்போது திவால் நடவடிக்கையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் அனில் அம்பானி நிறுவனம் திவால் நடவடிக்கையில் இறங்கி விட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அந்நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியானது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஆர்காம் நிறுவனத்துக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இதனையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பை கடந்த வாரம் அனில் அம்பானி ராஜினாமா செய்தார். அவருடன் சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர் மற்றும சுரேஷ் ரங்காசார் ஆகிய நால்வரும் தங்களது இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்கள். ஆனால் இவர்களின் ராஜினாமாவை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடன்கொடுத்தவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த தகவலை அந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது கடன்தாரர்கள் கமிட்டி அனில் அம்பானி மற்றும் இதர நால்வரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஆர்காம் நிறுவனத்தின் இயக்குனர்களாக தங்களது கடமை மற்றும் பொறுப்புகளை தொடர்ந்து செய்யும்படியும், நிறுவன திவால் நடவடிக்கையை விரைந்து முடிக்க ஒத்துழைக்கும்படி அவர்களிடம் கமிட்டி அறிவுறுத்தியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.