தன்னிடம் எகிறிய எஸ்.பி. மீது பாராளுமன்றத்தில் நோட்டீஸ்: கெத்து காட்டும் பொன்னார்!

 

தன்னிடம் எகிறிய எஸ்.பி. மீது பாராளுமன்றத்தில் நோட்டீஸ்: கெத்து காட்டும் பொன்னார்!

தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி. யதீஷ் சந்திராவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி: தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி. யதீஷ் சந்திராவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால், பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டது. இந்த இரண்டு காரணங்களினாலையும், சபரிமலைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

yathish

குறிப்பாக, பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்லாமல் கேரள அரசுப் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என பத்தனம்திட்டா போலீசார் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அந்த பணிகளை பத்தனம்திட்டா மாவட்ட எஸ்.பி.யாக இருந்த யதீஷ் சந்திரா முன் நின்று செய்து வந்தார். 

அந்த சமயத்தில் இருமுடி கட்டிக் கொண்டு தன் சகாக்களுடன் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு சென்றிருந்தார். அப்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. யதீஷ் சந்திராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. யதீஷ் சந்திராவின் அந்த செயலை கண்டித்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. எனினும், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் எஸ்.பி., செய்தது சரி தான் என விளக்கம் அளித்திருந்தனர். ஆனால், அந்த சம்பவம் நடந்த சில தினங்களிலையே நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட புதிய போலீஸ் குழுவை அறிவித்த கேரள அரசு, எஸ்.பி. யாதீஷ் சந்திராவை வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சபரிமலைக்கு சென்றபோது நிலக்கலில் தன்னை தடுத்து நிறுத்தியதாக எஸ்.பி.யதீஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.