தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

 

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து பள்ளிகளும் 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்தே இ-புத்தகம் மூலமாக படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பின் தாக்கம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஒரு சில தனியார் பள்ளிகளில் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

ttn

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பணியாற்று ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மழலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஊதியம் வழங்கியது தொடர்பாக விவரங்களை அளிக்குமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.