தனியாக மின்கம்பம்,டிரான்ஸ்பார்மர் அமைத்து பலே திருட்டு நடத்திய ரியல் எஸ்டேட் அதிபர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

 

தனியாக மின்கம்பம்,டிரான்ஸ்பார்மர் அமைத்து பலே திருட்டு நடத்திய ரியல் எஸ்டேட் அதிபர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். அதன் பின் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ், தன்னுடைய நிலத்தில் பிளாட் அமைத்து விற்பனை செய்ய திட்டமிட்டார்.  பிளாட் விற்பனை செய்வதற்கு மின் இணைப்பு உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் காட்டுவதற்காக அவருடைய நிலத்தில் மின்வாரிய அலுவலகத்திற்கே தெரியாமல் இரண்டு புதிய மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மரையும் அமைத்திருக்கிறார்.

tamilnadu electicity board

மின்சார வாரியத்திற்கே தெரியாமல், தனியொருவராக மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் எல்லாம் அமைத்து மின்திருட்டிலும் ரமேஷ் ஈடுபட்டு வந்தது தெரிந்து மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியானார்கள். பின்னர், இது குறித்த தகவலின் பேரில் ஆயில்பட்டி காவல்நிலையத்தில் ரமேஷ் மீது முள்ளுகுறிச்சி மின்வாரிய அதிகாரி கிருஷ்ணன் புகார் அளித்தார். இந்தப் புகாரை பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை அழைத்து விசாரணை நடத்தியதில், தவறு செய்ததை ஒப்புக் கொண்டு மின்வாரிய அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய 70ஆயிரத்து 760 ரூபாயை ரமேஷ் செலுத்தியுள்ளார்.

electric pole

சாதாரணமாக ஒருவரது வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மின்இணைப்பு எடுத்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்குமளவுக்கு மிரட்டும் மின்வாரியத்தினர், 2 மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரை யாருக்கும் தெரியாமல் அமைத்து, மின்திருட்டில் ஈடுபட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவையான உபகரணங்களை மின்வாரியத்தில் மட்டுமே வாங்க முடியும். இந்த உபகரணங்கள் தனிநபருக்கு எப்படி கிடைத்தது? இதில் மின்வாரியத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.