‘தனிப்பட்ட கருத்துக்கள் கூற பிரியங்காவுக்கு உரிமை உண்டு’: பாகிஸ்தானுக்கு ஐ.நா பதிலடி!

 

‘தனிப்பட்ட கருத்துக்கள் கூற பிரியங்காவுக்கு உரிமை உண்டு’: பாகிஸ்தானுக்கு ஐ.நா பதிலடி!

தனிப்பட்ட விருப்பங்களைத்  தெரிவிக்க நல்லெண்ண தூதர்களுக்கு உரிமை உண்டு என்று ஐநா பொதுச்செயலாளரின்  செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்திய விமானி அபிநந்தனை  பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. ஆனால்  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு யுனிசெப்-பின் நல்லெண்ண தூதராக உள்ள  நடிகை பிரியங்கா சோப்ராவும் ஜெய் ஹிந்த்  என்று கூறியிருந்தார். இதற்குப்  பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரீன் மசாரி, இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை எழும்போது நடுநிலையாகச் செயல்படாமல் ஒருதலைபட்சமாகப் பிரியங்கா சோப்ரா செயல்படுகிறார். அதனால் அவரை நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு ஐநாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள ஐநா பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டர்ஸின், செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறும்போது, ‘நல்லெண்ண தூதர்களுக்கும் தனிப்பட்ட விருப்பம் மற்றும் கருத்து உண்டு. அவர்களின் கருத்துக்கள் ஒருபோதும் யூனிசெப்பை பிரதிபலிக்காது. அவர்கள் யுனிசெப் குறித்துப் பேசும்போதோ, கருத்துச் சொல்லும்போதோ சார்பில்லாத நிலைப்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள்  என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.