தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு- விரிவான பட்ஜெட் சிறப்பம்சங்கள்

 

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு- விரிவான பட்ஜெட் சிறப்பம்சங்கள்

ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும்

ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும். தவிர மத்திய நிதியமைச்சகம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புகழ்வாய்ந்த நதிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறது. இது குறிப்பிட்ட காலக்கெடுக்குவுக்குள் நடைபெறும் என நம்புகிறேன் என்று மத்தியமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிஃப்டி 130 புள்ளிகளும் உயர்வு.

 “மீனவர் நலனுக்காக மீன்வளத்துறை ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கக்கூடியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மீனவர்களின் வாழ்நாளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. மத்திய பாஜக அரசுக்கு இது இறுதி பட்ஜெட்டா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், எதிர் கட்சிகள் அல்ல” என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
 
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

budget
 
தனிநபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தர கழிவு, 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிப்பு. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் கூட, வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
 
*தனிநபர் ஆண்டு வருமானம் 6.5 லட்சமாக இருந்தால், 1.5 லட்சம் ரூபாயை பிபிஎஃப் போன்ற சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்கும்.

budget
 
*டெபாசிட்டில் கிடைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை.
 
*வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை, இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்.
 
*வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு, ரூ. 1.8 லட்சத்திலிருந்து ரூ. 2.4 லட்சமாக உயர்வு.
 
*வங்கி, அஞ்சலங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரிக்கழிவு 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு.  2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும்.
 
*நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே, வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருமான வரிச்சலுகை அளிக்கப்படுவது மரபு இல்லை.

budget
 
*2030 இந்தியா என்ற தொலைநோக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல், 1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. ஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றில் இலக்கு நிர்ணயம்.
 
*திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றை சாளர முறை கடைப்பிடிக்கப்படும். SC, ST நலத்துறைக்கு 76,000 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் திட்டங்களுக்கு 3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
 
*தேசிய கல்வி திட்டத்துக்கு 38,572 கோடி நிதி. அடுத்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.4% எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
*எலெக்ட்ரிக் வாகனங்கள், மத்திய அரசின் 2030 இலக்குகளில் பிரதானமான ஒன்று. எலெக்ட்ரிக் வாகனங்கள் எரிபொருள் சார்பைக் குறைக்கும்.
 
*நடப்பாண்டில் மத்திய அரசின் பங்குகளை, 80 ஆயிரம் கோடிக்கு விற்க முடிவு.
 
*ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை இருந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை
 
*வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால், 3 கோடி பேர் பயன்பெறுவர்!

budget

*தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு, 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிப்பு – பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு.
 
*பணமதிப்பிழப்பு முறையால், 50 ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டன. பணமதிப்பு நீக்கத்தால் 1.30 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வந்திருக்கிறது. 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
 
*3.38 லட்சம் போலி கம்பெனிகளைக் கண்டுபிடித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
 
*வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
 
*ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிற்கு இந்திய பொருளாதாரம் உயரும்
 
*வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல், 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரிப்பு. 
 
*மக்கள் இதனை எளிதில் அணுகுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 
*நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
*ஜிஎஸ்டி முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

*நாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராஸிங் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது.
 
*விமானத் துறையில் வேகமான வளர்ச்சி இருப்பதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 
*உள்நாட்டு வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்துவருகிறது.  
 
*நெடுஞ்சாலைகளை அமைப்பதில் மிகவேகமான நாடு இந்தியாதான்.
 
*இந்தியாவில், சராசரியாக ஒரு நாளுக்கு 27 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. 
 
*வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. 
 
*இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 சதவிகிதம் அதிகரிப்பு.
 
*உலகிலேயே குறைவான டேட்டா கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான். கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவிகித டேட்டா பயன்பாடு அதிகரித்திருக்கிறது. செல்போன் உதிரிப்பாக உற்பத்தி அதிகரித்ததன் மூலமாக வேலைவாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.
 
*இடைக்கால பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 268-ஆக அதிகரிப்பு.
 
*மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில், கடனை உரிய நேரத்தில் கட்டினால் 3 சதவிகித வட்டி தள்ளுபடி. 
 
*முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதுடன், 7.23 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
 
*1 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 3 சதவிகித வட்டிக் கழிவு தரப்படும்.
 
*இதுவரை 6 கோடி எரிவாயு இணைப்புகள் தரப்பட்டுள்ளன.  கூடுதலாக 8 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும். 
 
*பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள்.

*ஜிஎஸ்டி-யில் பதிவுசெய்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு 3 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும். 
 
*ராணுவத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. 
 
*’ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
*ஓய்வூதியத் திட்டத்துக்கு, மாதம் 100 ரூபாய் ப்ரிமியம் செலுத்தவேண்டியிருக்கும். 
 
*அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு 50 சதவிகிதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
 
*மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழே ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, புதிய ஓய்வூதியத் திட்டம். இதில் 10 கோடி பேர் பயன்பெறுவர்.
 
*அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாத ஓய்வூதியமாக 3000 ரூபாய் குறைந்தபட்சம் கிடைக்கும்.
 
*பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும்.
 
*பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்பட்டும் நிவாரண நிதி, 6 லட்சம் ரூபாயாக உயர்வு.

budget

*மீனவர்களின் நலனுக்காக, மீன்வளத்துறை எனத் தனியாக உருவாக்கப்படும்.
 
*எல்இடி பல்புகள் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு 143 கோடி எல்இடி பல்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
 
*22 விவசாயப் பொருள்களின் ஆதார விலை 50 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
 
*ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், 10 லட்சம் மக்கள் சிகிச்சைபெற்றுள்ளனர். ஹரியானாவில், நாட்டின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
 
*விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பலன்பெறும்.
 
*பால் உற்பத்தியை அதிகரிக்க, காமதேனு எனும் சிறப்புத் திட்டம். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

budget
 
*தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு, 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.
 
*2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தரப்படும். இது,  3 தவணைகளாக, 2 ஆயிரம் வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

*2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையுடன், இதுவரை எட்டாத வளர்ச்சியை இந்தியா பெற்றிருக்கிறது
 
*வங்கித்துறையை சீரமைத்து முறைகேடுகளைக் களைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
 
*பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
 
*கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 239 பில்லியன் டாலராக அதிகரிப்பு
 
*கட்டுமானத் துறை சட்டம், பினாமி தடுப்புச் சட்டம், நிலக்கரி ஆகியவை ஊழலைத் தடுத்துள்ளது. 
 
*அலைக்கற்றை ஆகிய இயற்கை வளங்கள், வெளிப்படையான ஏலத்தின் முலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
*ஜிஎஸ்டி அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது.
 
*இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில், 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
 
*வங்கிகளை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
 
*ரூ.3 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை திருத்தப்பட்ட பட்ஜெட், 2018-19 மதிப்பீட்டில் 3.4% குறைக்கப்பட்டுள்ளது.
 
*ஊரக சுகாதாரம் 98% உறுதிசெய்யப்பட்டு, 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன என்பதுடன், தேவைபட்டால் ஊரக வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிப்பு. 
 
*உலகின் பொருளாதார வளர்ச்சியில் 11-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.
 
*உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
 
*ஊரக துப்புரவு நிலை 98 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

*ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. Insolvency & Bankruptcy Code வாயிலாக, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி மீட்கப்பட்டுள்ளது.
 
*கிராமப்புறங்களில் சாலை அமைக்கும் நடவடிக்கை மூன்று மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
 
*கிராம சாலைத் திட்டத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
*பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரியமை அளிக்க நடவடிக்கை.
 
*1.5 கோடி வீடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை, மார்ச் மாதத்துக்குள் உருவாகும்.

*பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் பல பத்தாண்டுகளுக்கு உயர்வளர்ச்சி நீடிக்கும்
 
*மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
 
*2022 -ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, மின்சாரம் வழங்க உறுதி
 
*கடந்த 5 ஆண்டுகளில், பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், வங்கித் துறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் பலனைத் தரத் தொடங்கியுள்ளன.
 
*5 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிகளின் வாராக்கடன் பற்றி யாருமே கவலைப்படவில்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பாக 6 சதவிகிதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, தற்போது 3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது – பியூஷ் கோயல்!
 
*பணவீக்க விகிதத்தை 4.4 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. 
 
*மோடியின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
 
*2022 -க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு 
 
*பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க அரசு வெற்றிகண்டுள்ளது
 
*பணவீக்க விகிதத்தை 4.4 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது – பியூஷ் கோயல்
 
இந்தியா உறுதியான முன்னேற்றப் பாதையில் செல்வதாகக் கூறி, தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். தற்போது அவர் பட்ஜெட் உரையை வாசித்துவருகிறார். 

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆகவுள்ள நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் கறுப்பு உடையில் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.  

வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது அதிகாரத்தில் உள்ள மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள சூழலில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள்குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது