தனிநபர்களின் தகவல்களை திருடும் ஆரோக்கிய சேது செயலி! தொடரும் விமர்சனங்கள்

 

தனிநபர்களின் தகவல்களை திருடும் ஆரோக்கிய சேது செயலி! தொடரும் விமர்சனங்கள்

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த செயலியை தானாக முன்வந்து 9கோடி பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்தனர்

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த செயலியை தானாக முன்வந்து 9கோடி பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்தனர். இந்நிலையில் மே 4ம் தேதி முதல் நாட்டின் எந்தபகுதியிலும் வேலைபார்க்கும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் செல்போன்களில் ஆரோக்கிய சேது கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனத்தில் பணியாளரின் செல்போனில் ஆரோக்கிய சேது அப் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிறுவனத்தின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலி  மூலம் தனிநபர் தகவல்களுக்கு ஆபத்து இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

ஆரோக்கிய சேது

இந்நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த கணினி ஆய்வாளர் எலியட் ஆண்டர்சன், ஆரோக்கிய சேது மூலம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், ஆரோக்கிய சேது செயலியை வடிவமைத்தவர்களை தொடர்புகொண்டு விவரங்களையும் கூறினார். ஆரோக்கிய சேது செயலியை வடிவமைத்தவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பிரான்ஸ் கணினி ஆய்வாளர் குறிப்பிட்டது போல, தனிப்பட்ட நபர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிரூபிக்கபடவில்லை என தெரிவித்துள்ளனர். பயனாளர்களின் இருப்பிடம் குறித்து சேகரிக்கப்படும் தகவல்கள், மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனினும், இதை ஏற்க மறுத்துள்ள பிரான்ஸ் கணினி ஆய்வாளர், விரிவான விவரங்களை விரைவில் வெளியிடுவதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

ரவி சங்கர் பிரசாத்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்திய மக்களின் பொதுநலனுக்காக, அதாவது கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் அருகே இருந்தால் தெரிவிப்பதற்காக ஆரோக்கிய சேது செயலி வடிவமைக்கப்பட்டது என்றார். மேலும், தனிநபர்களின் தரவுகளை பாதுகாப்பதிலும் மிகவும் சிறந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொற்று ஏற்படாத நிலையில், ஒருவரின் தரவுகள் 30 நாட்களுக்கு மட்டுமே சேமித்து வைக்கப்படுவதாகவும் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.