தடுத்து நிறுத்தப்பட்ட 3 பெண்கள்; சபரிமலையில் பரபரப்பு

 

தடுத்து நிறுத்தப்பட்ட 3 பெண்கள்; சபரிமலையில் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த 3 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த 3 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பிற்கு இந்து அமைப்பினர், ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரண்மனையை சேர்ந்தவர்கள் என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என திருவிதாங்கூர் தேவசம்போர்டும், கேரள அரசும் தெரிவித்திருந்தன. மேலும் நவம்பர் 17-ம் தேதி முதல் ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவசம்போர்டு தெரிவித்திருந்தது.

ஆனால், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழிபாட்டு நாட்களின் போது பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் பம்பை செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது அவர்களை பத்தனம்திட்டாவில் பேருந்தில் இருந்து பக்தர்கள் இறக்கி சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். மேலும் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவல்துறையினரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.