தஞ்சையில் களைகட்டிய சதய விழா!

 

தஞ்சையில் களைகட்டிய சதய விழா!

தஞ்சையின் அடையாளமாக கருதப்படும் பெரியகோயிலில் ராஜ ராஜ சோழனின் 1033 வது சதய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஐப்பசியில் வரும் சதய நட்சத்திர நாள் ராஜராஜன் அவதரித்த நாளாகவே கருதப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

thanjai

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இனைந்து ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா எனும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் 

ஆயிரம் வருடங்களாக எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைக் கடந்திருக்கிறது பெரிய கோயில். இத்தனை இடர்களையும் கடந்து அன்று எப்படிப் பிரமிப்பூட்டியதோ அதேமாதிரி இன்றும் நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில்.

இந்தக் கோயிலை எழுப்பிய ராஜராஜன் பிறந்த சதய விழா நேற்று துவங்கி இன்று வரை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

thanjaiuk

பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், நேற்று  காலை மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. பிறகு, மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறை ராஜராஜன் ஆட்சிக்காலம் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், திருமுறை பன்னிசை என்கிற பெயரில் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று காலை 7.30 மணிக்கு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து கோயிலில் பணிபுரியும் சிப்பந்திகள் அனைவருக்கும் வஸ்திர தானம் வழங்கப்பட்டது. 

thanjagh

அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு அபிஷேகம்,ஆராதனைகள் நடைபெற்றது.அதன்பின்னர் 108 கலச பூஜை நடைபெற்றது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் தேவார வீதி உலாநடைபெற்றது.

இன்று மாலையில், நாத இசை சங்கமம் நிகழ்ச்சியும் ,திருமுறை பண்ணிசையரங்கமும் அதனையடுத்து கருத்தரங்கமும் பின்னர் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது இறுதியாக, பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து நகரம் முழுமையும் வீதி உலா நடைபெற உள்ளது.

thanjaavur

நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜ ராஜன் சிலையை குஜராத்தில் இருந்து மீட்டுக்கொண்டு வந்து கோயிலில் வைத்துள்ள நிலையில்  சதய விழாவுக்குதமிழகம் முழுதும் இருந்து வரும் பக்தர்கள் ராஜராஜ சோழன் சிலை முன்பு நின்று உருகி வேண்டிக்கொண்டு செல்கின்றனர்.