டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடைபெறும் – ஜப்பான் பிரதமர் அபே

 

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடைபெறும் – ஜப்பான் பிரதமர் அபே

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 4,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், இத்தலி, தென்கொரியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

Olympics

இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் போட்டி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் கோடிக்கணக்கான ரூபாயை ஜப்பான் அரசு இழக்க நேரிடும். ஏனெனில் ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் அரசு ஏராளமான பணத்தை செலவு செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் விமான சேவை முடக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வீரர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.