டெஸ்ட் போட்டிகளில் 25-வது சதத்தை பதிவு செய்வாரா விராட் கோலி? நாளை ஆஸி.,-யுடன் 3-ஆம் நாள் ஆட்டம்

 

டெஸ்ட் போட்டிகளில் 25-வது சதத்தை பதிவு செய்வாரா விராட் கோலி? நாளை ஆஸி.,-யுடன் 3-ஆம் நாள் ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது

-குமரன் குமணன்

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் பெர்த் நகரில் நேற்று காலை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 90 ஒவர்களில் 6 விக்கெட்களை இழந்து 277 ரண்கள் எடுத்திருந்தது.

இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பெய்ன் மற்றும் கம்மின்ஸ் இருவரும், அணி 300 ரண்களை கடக்க உதவினர். 310 ரண்களாக ஸ்கோர் இருந்தபோது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் கம்மின்ஸ். அடுத்த ஓவரிலேயே பும்ராவால் வீழ்த்தப்பட்டார் பெய்ன். அவர் 5 பவுண்டரிகளுடன் 89 பந்துகளில் 38 ரண்கள் எடுத்தார். அந்த அணியின் ஸ்கோர் 326 ரன்களாக இருந்த போது, கடைசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டார்க் 6 (10) மற்றும் ஹேசில்வுட் 0 (1) ஆகியோர் பண்ட் -இஷாந்த் இணையால் வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர், தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் விஜய் 11 பந்துகளை எதிர்கொண்டு ரண் எடுக்காமலும், ராகுல் 17 பந்துகளில் 2 ரண்களுடனும் முறையே ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரால் வெளியேற்றப்பட்டனர்.

8 ரண்களில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்ட பின்னர் புஜாரா – கோலி இணைந்து 200 பந்துகளில் 74 ரண்கள் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய புஜாரா 103 பந்துகளில் 24 ரண்கள் எடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு கோலியுடன் இணைந்த ரஹானே,தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இந்த போட்டியின் முதல் சிக்சரை பதிவு செய்தார் அவர், பின்னர் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப தனது வழக்கமான அணுகுமுறைக்கு மாறினார். பல சாவால்களை எதிர்கொண்டு நிதானம் காட்டி கோலி முதலில் அரை சதம் கடக்க அடுத்து, ரஹானேவும் அரை சதத்தை எட்டினார்.

ஆட்ட நேர இறுதிவரை நிலைத்த இந்த ஜோடி இதுவரை 184 பந்துகளில் 90 ரண்கள் எடுத்திருக்கிறது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 69 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரண்கள் எடுத்திருக்கிறது. கோலி 181 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 82 ரண்களுடனும், ரஹானே 103 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என  51 ரண்களுடனும் களத்தில் உள்ளனர்.

154 ரண்கள் பின்தங்கியுள்ள நிலையில் நாளை மூன்றாம் நாளில் கோலி – ரஹானே இணை எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறது என்பதை பொறுத்தே இப்போட்டியின் போக்கு அமையும். அதேசமயம், இன்னும் 18 ரண்கள் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் கோலி தனது 25-ஆம் சதத்தை பதிவு செய்வார் என்பதால் நாளைய மூன்றாம் நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.