டெல்லி பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் மனோஜ் திவாரி! அப்பம் நாங்க போன திருப்ப காட்டிலும் அதிக இடங்களில் ஜெயிச்சுருவோம்…. ஆம் ஆத்மி கிண்டல்

 

டெல்லி பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் மனோஜ் திவாரி! அப்பம் நாங்க போன திருப்ப காட்டிலும் அதிக இடங்களில் ஜெயிச்சுருவோம்…. ஆம் ஆத்மி கிண்டல்

டெல்லி பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் மனோஜ் திவாரி என மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கூறியதையடுத்து, அப்படின்னா நாங்க 2015ம் ஆண்டை காட்டிலும் அதிக இடங்களில் ஜெயிச்சுருவோம் என ஆம் ஆத்மி கட்சி கிண்டல் செய்துள்ளது.

டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இப்பமே அரசியல் கட்சிகள் அனைத்தும் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டன. குறிப்பாக பா.ஜ.க. டெல்லியை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், டெல்லி பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் மனோஜ் திவாரி என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தெரிவித்தார்.

மனோஜ் திவாரி

இது தொடர்பாக ஹர்தீப் சிங் புரி கூறுகையில், மனோஜ் திவாரி தலைமையில் சட்டப்பேரவை தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம் மற்றும் அவரை முதல்வராக ஆக்கிய பிறகே நமக்கு ஓய்வு என தெரிவித்து இருந்தார். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு டிவிட்டரில், முதல்வர் பதவிக்கு இதுவரை பா.ஜ.க. யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மனோஜ் திவாரி தலைமையில் பெரும் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டு இருந்தேன் என இந்தியில் விளக்கம் அளித்து பதிவு செய்து இருந்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி முதல்வர் பதவிக்கு மனோஜ் திவாரியின் பெயரை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பரிந்துரை செய்ததை தற்போதைய ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கிண்டல் செய்துள்ளது. ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இது குறித்து டிவிட்டரில், மனோஜ் திவாரியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது, தற்போது நாம் 2015 சாதனையை முறியடித்து விடுவோம் என பதிவு செய்து இருந்தார். 2015ல் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.