டெல்லில்லி தேர்தல்: கோடீஸ்வரர்களை போட்டி போட்டு களமிறக்கிய கட்சிகள்!

 

டெல்லில்லி தேர்தல்: கோடீஸ்வரர்களை போட்டி போட்டு களமிறக்கிய கட்சிகள்!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் கோடீஸ்வரர்கள், கிரிமினல் வழக்கு உள்ளவர்களுக்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சி சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் 164 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.

டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்து, இறுதி பட்டியல் தயாராகி வருகிறது. 

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், அதிகட்சமாக புதுடெல்லி தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தொகுதியில்தான் போட்டியிடுகிறார். குறைந்தபட்சமாக படேல் நகர் தொகுதியில் நான்கு பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். 

இந்த தேர்தலில் மொத்தம் 164 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 143 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல். 13 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 50 லட்சத்துக்கும் மேல். இதில் அதிக பணக்காரர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர்.

முந்த்கா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த தரம்பால் லக்ராவின் சொத்து மதிப்பு 292.1 கோடியாகும். ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிடும் பரமிலா டோகாஸின் சொத்து மதிப்பு 80.8 கோடி ரூபாய். பாதர்பூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் ராம் சிங் நேதாஜியின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி. படேல் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் ஆனந்தின் சொத்து மதிப்பு ரூ.76 கோடி.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா சிங் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 70.3 கோடி. சதர்புர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க-வை சேர்ந்த ப்ரம் சிங் தன்வரின் சொத்து மதிப்பு 66.3 கோடி. கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அணில் கோயலின் சொத்து மதிப்பு 64.1 கோடியாகும்.

ஏழை வேட்பாளர்கள்

அதேபோல் ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக சொத்து உள்ளதாக 5 பேர் தெரிவித்துள்ளனர். முதல் இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராக்கி துஷீத் உள்ளார். இவர் ராஜேந்திர நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தன்னிடம் ரூ.55,575 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் நிலம், வாகனம், நகை என எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இரண்டாவது இடத்தில் பா.ஜ.க-வின் ராஜ்குமார் தில்லான் உள்ளார். இவர் தன்னிடம் 55,900 மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 3வது இடத்தில், ஆம் ஆத்மியின் ராகி பிட்லன் உள்ளார். கடந்த 2015ல் தனக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்திருந்த அவர், தற்போது ரூ.40 ஆயிரம் ரொக்கம் உட்பட ரூ.76,421 மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் சராசரி வயது 43.1 ஆக இருந்தது, தற்போது 47.3 ஆக உள்ளது. அதேபோல், கடந்த 2015 ல் பா.ஜ., வேட்பாளர்களின் சராசரி வயது51.7 ஆக இருந்தது தற்போது, 52.8 ஆக அதிகரித்தது. அதேநேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி வயது 53.3 லிருந்து 51.2 ஆக குறைந்துள்ளது.

இளவயது வேட்பாளர்கள்

40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆம் ஆத்மியில் அதிகம். அந்தக் கட்சி 40 வயதுக்கு கீழ் உள்ள 20 பேருக்கு வாய்ப்பளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 12 பேருக்கும், பா.ஜ.க ஆறு பேருக்கும் சீட் வழங்கியுள்ளது. துக்லாகாபாத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் துசீத் சுபம் சர்மாதான் இளம் வேட்பாளர் ஆவார். அவருக்கு வயது 29தான் ஆகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் சதாரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர நாத்தான் அதிகம் வயதான வேட்பாளர். அவரது வயது 75. 

இந்த தேர்தலில் கட்சி வித்தியாசம் இன்றி கிரிமினல் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளனர். எந்த கட்சி அதிக கிரிமினல்களுக்கு வாய்ப்பளித்துள்ளது என்ற விவரம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.