டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர்…..

 

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர்…..

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே, மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர். மேலும் அந்த பகுதியில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடந்து விடாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் டஜன் கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மதியம் 1.40 மணி அளவில் இளைஞர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியை அசைத்து காட்டிய படி, பின்னோக்கி நடந்தார். பின் அவர்களை நோக்கி சுட்டார். அதற்கு பிறகு இதோ உங்கள் சுதந்திரம் என கோஷமிட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர், காயம் அடைந்த நபர்

போலீசார் முன்னிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இருந்தாலும் அவர்களால் உடனடியாக துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரை தடுக்க முடியவில்லை. இருப்பினும் சுதாரித்து கொண்ட ஒரு காவலர் தைரியமாக சென்று அந்த இளைஞரை பிடித்தார். போலீசார் பிடித்தவுடன் தனது ஆயுதத்தை அவர்களிடம் ஒப்படைத்து, டெல்லி போலீஸ் நீண்ட நாள் வாழ்க என கோஷமிட்டார்.போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அந்த இளைஞர் துப்பாக்கி சூடு சம்பவத்தை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். 

துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைது

விசாணையின் போது, துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் 17 வயது சிறுவன் என்பதும் உத்த பிரதேசம் ஜீவார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் டெல்லி வந்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்திய ஆயுதம் குறைந்த தூரம் சுடும் நாட்டு துப்பாக்கி. போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், குற்றவாளி தப்பிவிட கூடாது என்றும் டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு டெல்லி போலீசின் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.