டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 

டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த வியூகம் வகுக்கும் பொருட்டு டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது

டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த வியூகம் வகுக்கும் பொருட்டு டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விட கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக பணி புரிந்து வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் எதிர்க்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

stalinchandrababu

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரை கடந்த மாதம் தனித்தனியாக சந்தித்து சந்திரபாபு நாயுடு பேசினார்.

அப்போது, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் டெல்லியில் ஒன்று திரட்டி ஆலோசனை கூட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்தார். கடந்த மாதம் 22-ம் தேதி இந்த கூட்டம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக இக்கூட்டம் டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

stalinrahul

அதன்படி, மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ.வை வீழ்த்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகள் இன்று முதல்முறையாக கூடி ஆலோசனை நடத்துகின்றன.

இன்று மாலை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இடதுசாரி தலைவர்கள் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் யாதவ், லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.