டெல்டா மாவட்டங்களில் கெடுபிடி வசூல்: இந்திய கம்யூ., கடும் கண்டனம்

 

டெல்டா மாவட்டங்களில் கெடுபிடி வசூல்: இந்திய கம்யூ., கடும் கண்டனம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அரசு, வங்கி அதிகாரிகளின் இரக்கமற்ற கெடுபிடி வசூலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அரசு, வங்கி அதிகாரிகளின் இரக்கமற்ற கெடுபிடி வசூலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ஒரு மாதத்தை கடந்தும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து, வேலை வாய்ப்பும் இன்றி பரிதவித்து நிற்கின்றனர். அரசின் நிவாரணப் பணிகள் ஆமை வேகத்திற்கும் சற்றும் குறைவின்றி நடைபெற்று வருவது அனைவரும் நன்கு அறிந்ததே.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் குறித்து சற்றும் கவலைக் கொள்ளாது அவர்களை மேலும் துன்புறச் செய்யும் விதமாக, கந்துவட்டிக்காரர்கள் போன்று அரசின் செயல்பாடு உள்ளது அவமானகரமான செயலாகும். மக்கள் நிவாரணத்திற்காக ஏங்கித் தவித்து வரும் நிலையில் அவர்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்திட வேண்டும் என்பதற்காக துன்புறுத்தப் படுகிறார்கள்.

குறிப்பாக நான்கு மாவட்டங்களிலும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடனை உடனே திரும்ப செலுத்திட வேண்டுமென வற்புறுத்தப்படுகின்றனர். அரசு, வங்கி அதிகாரிகளின் இத்தகைய இரக்கமற்ற செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தகைய கந்துவட்டி வசூலை உடனே நிறுத்திடுமாறு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.