டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கஜா புயல் ஏற்படுத்திச் சென்றுள்ள சோகம் இன்னமும் தீராத நிலையில், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை: கஜா புயல் ஏற்படுத்திச் சென்றுள்ள சோகம் இன்னமும் தீராத நிலையில், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்குப்பக்கமான நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை,  தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையை பொறுத்தவரை ஓரிரு முறை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.