டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

 

டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை: டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. எனவே அதனை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரண், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? சிறப்பு வார்டுகள், சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து வரும் 20-ம் தேதிக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.