டெங்குகாய்ச்சலுக்கு மீண்டும் ஒரு சிறுமி உயிரிழப்பு..பீதியில் மக்கள்…!

 

டெங்குகாய்ச்சலுக்கு மீண்டும் ஒரு சிறுமி உயிரிழப்பு..பீதியில் மக்கள்…!

மீண்டும் ஒரு சிறுமி டெங்குகாய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெங்குகாய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படும் நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . டெங்குகாய்ச்சலை தடுப்பதற்கு நூற்றுக்காண களப்பணியாளர்களை நியமித்து அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிறுமி டெங்குகாய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Dengue

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சி.எஸ்.ஒ பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி யோகேஸ்வரி, கடந்த வாரம் அதிக காய்ச்சல் இருந்ததால் பள்ளிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் சற்றும் குறையாமல் நீடித்ததால் சிறுமியைத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, யோகேஸ்வரிக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Yogeshwari

அதனையடுத்து, சிறுமியைச் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். யோகேஸ்வரிக்கு தனிப்பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. பல்வேறு கட்ட சிகிச்சைக்குப் பிறகும் சிறுமியை டெங்குகாய்ச்சலில் இருந்து காப்பற்ற முடியாததால் இன்று காலை பரிதாபமாக யோகேஸ்வரி உயிரிழந்துள்ளார். நேற்று, 11 மாத குழந்தை திருத்தணி அருகே டெங்குகாய்ச்சலால் உயிரிழந்துள்ளது. அதே பகுதியில் மீண்டும் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.