டீ வாங்கினால் எவர்சில்வர் பாத்திரம் இலவசம்: தேநீர் வியாபாரிக்கு குவியும் பாராட்டுகள்

 

டீ வாங்கினால் எவர்சில்வர் பாத்திரம் இலவசம்: தேநீர் வியாபாரிக்கு குவியும் பாராட்டுகள்

தன் கடையில் தேநீர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தை இலவசமாக வழங்கும் வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

வேலூர்: தன் கடையில் தேநீர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தை இலவசமாக வழங்கும் வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ளது. இதனால், தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கருதும் வியாபாரிகள் சிலர் சட்டத்திற்கு புறம்பாக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனை கண்காணிக்க மாவட்டந்தோறும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதற்கான முயற்சியிலும் பல வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர்  அருகே தேநீர் கடை நடத்தி வரும் சேட்டு என்பவர், தன் கடைக்கு வழக்கமாக தேநீர் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரம் வழங்குவதென முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, நேற்று தன் கடைக்கு தேநீர் பார்சல் வாங்க வந்த வழக்கமான வாடிக்கையாளர்கள் 150 பேருக்கு எவர்சில்வர் தூக்கு டிபன் பாத்திரத்தை நேற்று அவர் இலவசமாக வழங்கினார்.
தொடர்ந்து வாடிக்கையாளர்களை தன் கடையிலேயே தேநீர் வாங்க வைப்பதற்கான முயற்சியாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து சேட்டு கூறுகையில், “பிளாஸ்டிக் பயன்பாட்டால் எத்தகைய தீமைகள் உருவாகும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சுற்றுச் சூழலை காக்கவும், இயற்கை வளத்தை மேம்படுத்தவும் அரசு எடுக்கும் முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதால், செலவுகளை பொருட்படுத்தாமல் என் வாடிக்கையாளர்களுக்காக எவர் சில்வர் பாத்திரம் வாங்கி அதில் தேநீர் வழங்கி வருகிறேன். வழக்கமாக வரும் வாடிக்கை யாளர்கள் இனி அந்த பாத்திரத்தை கொண்டு வந்து தேநீர் வாங்கிச் செல்லலாம். இது எனக்கு மனநிறைவை தருகிறது” என கூறினார். 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதையடுத்து, அடுத்தகட்ட நகர்வாக எவர்சில்வர் பாத்திரத்தை இலவசமாக கொடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தேநீர் வியாபாரி சேட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.