டிரா செய்ய பெரும்பாடு பட்ட ஜிம்பாப்வே – முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி

 

டிரா செய்ய பெரும்பாடு பட்ட ஜிம்பாப்வே – முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிரேக் எர்வின், கெவின், பிரின்ஸ் மூவரும் அரைசதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 515 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஜிம்பாப்வே அணி விளையாடியது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பில்லாமல் 30 ரன்களை எடுத்திருந்தது.

ttn

இதையடுத்து நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய ஜிம்பாப்வே இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 170 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்யும் நோக்கிலேயே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். இதன் காரணமாக ஏழு வீரர்கள் ஐம்பதுக்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டனர். ஆனால் அந்த அணியின் கனவு நிறைவேறாமல் போனது. கடைசி நாள் ஆட்டம் முடிவடைய 13 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெறும் 14 ரன்களை சேஸ் செய்த இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி மூன்றே ஓவர்களில் இலக்கை எட்டியது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 27-ஆம் தேதி தொடங்குகிறது.