டிரம்ப் மிரட்டினாலும் வரி போடத்தான் செய்வோம்… கெத்து காட்டும் பிரான்ஸ்…..

 

டிரம்ப் மிரட்டினாலும் வரி போடத்தான் செய்வோம்… கெத்து காட்டும் பிரான்ஸ்…..

அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளபோதிலும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வரி விதிப்பை திட்டமிட்டப்படி இந்த வாரம் அமல்படுத்துவோம் என பிரான்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கூகுள், பேஸ்புக், அமேசான், ஆப்பிள், உபேர் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரான்சில் நல்ல வருமானத்தை பார்க்கின்றன. ஆனால் அந்நாட்டுக்கு பெயரளவுக்கு வரியாக செலுத்துகின்றன. ஏற்கனவே பிரான்ஸ் அரசுக்கு வரி வருவாய் குறைவாக  உள்ளது. அதனை ஈடுகெட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரான்சில் சம்பாதிக்கும் வருவாயில் 3 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என அறிவித்தது. இந்த வாரம் முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளது.

பிரான்ஸ் தேசிய கொடி

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படும் என்றவுடன் வழக்கம்போல் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பொங்கினார். இந்நிலையில் நேற்று டிவிட்டரில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரான்ஸ் டிஜிட்டல் வரி விதித்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு அவற்றின் சொந்த நாடு மட்டுமே வரி விதிக்க முடியும். மேக்ரான் முட்டாள்தனத்துக்கு பதில் நடவடிக்கையை நாம் விரைவில் அறிவிப்போம். பிரான்ஸ் ஒயினை விட அமெரிக்க ஒயின்தான் சிறந்தது என்று எப்போதுமே கூறுகிறேன். இவ்வாறு டிரம்ப் பதிவு செய்து இருந்தார். அதாவது பிரான்ஸ் ஒயின் மீது கூடுதல் வரி விதிப்போம் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

டிரம்ப்

இந்நிலையில், பிரான்ஸ் நிதியமைச்சர் இது குறித்து கூறுகையில், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 3 சதவீத வரியை எந்தவகையில் பிரான்ஸ் நடைமுறைப்படுத்தும். டிஜிட்டல் செயல்பாடுகளின் உலகளாவிய வரிவிதிப்பு மிகவும் சவாலானது என்று தெரிவித்தார். பிரான்ஸ் அரசின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளை சோ்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்ல அந்நாட்டு சேர்ந்த நிறுவனங்களும் வரி செலுத்து வேண்டியது இருக்கும்.