டிசம்பர் 23 முதல் சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு இடம் இல்லை

 

டிசம்பர் 23 முதல் சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு இடம் இல்லை

அடுத்த மாதம் 23ம் தேதி முதல் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்பட 4 நிறுவனங்கள் இடம் பெறாது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி சுசுகி இந்தியா உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த நிறுவனங்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்து சென்செக்ஸ்  புள்ளிகள் கணக்கிடப்படுகிறது. இந்த சென்செக்ஸ் 30 பட்டியலில் இடம் பெற்றுள்ள  நிறுவனம் என்றாலே சிலர்  நம்பிக்கையாக முதலீடு செய்வது உண்டு.

யெஸ் பேங்க்

தற்போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து டாடா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர்., யெஸ் பேங்க் மற்றும் வேதாந்தா ஆகிய 4 நிறுவனங்கள் வெளியேற்றப்பட உள்ளன. டிசம்பர் 23ம் தேதி முதல் சென்செக்ஸ் பட்டியலில் இந்த நிறுவனங்கள் இடம் பெறாது என ஏசியா இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

நெஸ்லே இந்தியா

அதேசமயம் அவற்றுக்கு மாற்றாக, நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டைட்டன் ஆகிய  நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற உள்ளன. சென்செக்ஸ் பட்டியலில் மாற்றம் நிகழ இருப்பது போல் எஸ்&பி பி.எஸ்.இ. சென்செக்ஸ் 50 பட்டியலில் யூ.பி.எல். மற்றும் தாபர் இந்தியா நிறுவனங்கள் புதிதாக இணைய உள்ளன. அதேசமயம் சென்செக்ஸ் 50 பட்டியலில் இருந்து இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யெஸ் பேங்க் ஆகியவை வெளியேற்றப்படுகின்றன. இந்த மாற்றங்களும் டிசம்பர் 23ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஏசியா இன்டெக்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.