டாஸ்மாக் திறப்பை கண்டித்து விசிக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிவிப்பு

 

டாஸ்மாக் திறப்பை கண்டித்து விசிக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிவிப்பு

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் சமூக பரவல் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே பொது இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் கடுமையான ஊரடங்கை பின்பற்றியதால் தற்போது கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றன. ஆனால் இந்தியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 40 நாட்களுக்கு மேலாக மது அருந்தாமலிருந்ததால் குடிமக்கள், டாஸ்மாக்கில் குவிந்துவருகின்றனர். இதனால் சமூக பரவல் ஏற்படும் அபாயம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன

tasmac

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே7 அன்று டாஸ்மாக்- மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நாளை மே 6 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டம் அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்’ என முழக்கம் எழுப்பும் வகையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. பொது மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக சென்னையில் மட்டும் கடைகள் இயங்காது என்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. பேரிடர் காலத்தில் தமிழக அரசின் இந்த முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 70 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள் என அரசு தரப்பிலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் குடி நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு உடல் கோளாறுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அதனால் அவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று மிக எளிதில் தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  நோய்த் தொற்றுக்கு ஆளாகிறவர்களில்  ஏற்கனவே உடல் பலவீனமாக இருப்பவர்களே உயிர் இழக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த குடிநோயாளிகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் உயிர் இழக்கக் கூடிய ஆபத்து உள்ளது. அப்படி பார்த்தால் டாஸ்மாக் கடைகளைத்  திறப்பதன்மூலம் சுமார் ஒரு கோடி பேரின் உயிருக்கு தமிழக அரசு உலை வைத்துள்ளது.

tasmac

மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வரும் முழு அடைப்பின் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் அன்றாட உணவுக்கே கையேந்தும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் ஆளாகி உள்ளனர். இந்தச் சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் ஏழை எளிய மக்களின் மிச்சம் மீதி உள்ள வாழ்வாதாரமும் பறிக்கப்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடும்ப வன்முறை பெருகி அவர்கள் தேவையற்ற கடனாளிகள் ஆவார்கள். பேரிடர் காலத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்த மக்கள் விரோத முடிவைக் கண்டித்தும், டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாளை நடைபெறவுள்ள அறப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.