டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

 

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து  வந்தது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 43 பைசா அளவுக்கு வீழ்ச்சியடைந்து ரூ.73.80-ஆக சரிந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, அந்நிய நேரடி முதலீடு குறைவு உள்ளிட்ட காரணங்களால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.