டாக்டர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள்! – மத்திய சுகாதாரத் துறை அமைச்சசர் வேண்டுகோள்

 

டாக்டர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள்! – மத்திய சுகாதாரத் துறை அமைச்சசர் வேண்டுகோள்

டெல்லி, ஆந்திரா, தெலங்கானாவில் மருத்துவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தும் சம்பவங்கள் பற்றி மத்திய உள்துறை அமைச்சருக்கு புகார் சென்றது. பணி முடிந்து வீடு திரும்பிய பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரையும் போலீசார் தாக்கிய செய்திகள் வெளியாகின. மாஸ்க் கேட்ட மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோன்ற செயல்கள் மருத்துவர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது, தாக்குவது என்று நாடு முழுவதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், மருத்துவர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

corona-doctors

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கொரோனாவுக்கு எதிரான போர் என்பது தேசத்தின் பொறுப்பு… மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் இந்த போரின் வீரர்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக, அவர்களை பிரித்துப் பார்க்கும் போக்கை சிலர் உருவாக்கி வருகின்றனர். கொரோனா வீரர்களின் மன உறுதியை குலைக்காதீர்கள். இந்த போர் என்பது புனிதமானது என்பதை மறக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.