டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கத்திற்கு இடைக்கால தடை; நீதிமன்றம் அதிரடி!

 

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கத்திற்கு இடைக்கால தடை; நீதிமன்றம் அதிரடி!

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை: டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசிய போது, ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த பிரச்னைகளை சின்மயியும் பகிர்ந்தார். தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரும், பல தேசிய விருதுகளை வென்றவருமான வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் கிளப்பினார்.

இதையடுத்து, பாடுவது மட்டுமன்றி, கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்த சின்மயி, சினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

எனக்கு தகவல் தெரிவிக்கலாமலேயே சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். நான் நீக்கப்பட்டதை தாமதமாக தெரிவித்துள்ளனர். உறுப்பினராக இல்லையென்றால் படங்களில் பணியாற்ற அனுமதிக்க விட மாட்டார்கள். இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டணம் செலுத்தவில்லை என கூறி நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள சின்மயி, உறுப்பினர் கட்டணமாக ரூ.5 லட்சம் சந்தா கேட்கின்றனர். ஆட்களுக்கு ஏற்றாற்போல் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் அப்போது சின்மயி குற்றம் சாட்டினார்.

மேலும், தான் நீக்கப்பட்டதற்கு டப்பிங் சங்கத்தின் தலைவரான ராதாரவி தான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது நீக்கத்தை எதிர்த்து சின்மயி தரப்பில் சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, 2006-ஆம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி விட்டதாகவும், 2018- ஆம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை வித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், டப்பிங் யூனியன் சங்கமும் அதன் தலைவர் ராதாரவியும் வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, நீண்ட சட்டப்போராட்டம் காத்திருப்பதாகவும், நீதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.