ஜோடி சேரும் பி.எஸ்.என்.எல்.,எம்.டி.என்.எல். நிறுவனங்கள்! ரூ.70 ஆயிரம் கோடியில் புத்துயிர் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

ஜோடி சேரும் பி.எஸ்.என்.எல்.,எம்.டி.என்.எல். நிறுவனங்கள்! ரூ.70 ஆயிரம் கோடியில் புத்துயிர் கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரூ.70 ஆயிரம் கோடியில் நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டும் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் நஷ்ட கணக்கை காட்டி வருகின்றன. கடந்த 2014-15ம் நிதியாண்டு முதல் 2018-19 வரையிலான காலத்தில் அந்த நிறுவனங்களின் நஷ்டம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 

எம்.டி.என்.எல்.

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களின் வருவாயில் பெரும் பகுதி தனது பணியாளர்களின் சம்பளமாக சென்று விடுகிறது. எம்.டி.என்.எல். நிறுவனத்தின் வருவாயில் 87 சதவீதம் பணியாளர்களின் ஊதியத்துக்கு செலவிடப்படுகிறது. அதேவேளையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வருவாயில் 77 சதவீதம் பணியாளர்களின் சம்பளத்துக்கு சென்றுவிடுகிறது.

பி.எஸ்.என்.எல்.

அந்த நிறுவனங்கள் சமீபகாலமாக தனது பணியாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கூட போட முடியாமல் திணறி வருகின்றன. இதனையடுத்து பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியாருக்கு தாரைவார்க்கப்படும் என பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் அந்நிறுவனங்களுக்கு புத்துயிர் மற்றும் மீண்டும் போட்டியிடும் திறனுடன் செயல்பட வைக்கும் வகையில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பணியாளர்களுக்கு வி.ஆர்.எஸ்., நிறுவனங்களுக்கு 4ஜி அலைகற்றை உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.