ஜே.பி. நட்டா மகன் திருமண வரவேற்பின்போதே மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய பா.ஜ.க.

 

ஜே.பி. நட்டா மகன் திருமண வரவேற்பின்போதே மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய பா.ஜ.க.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் மகன் திருமண வரவேற்பின்போதே, மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல் நாத்துக்கு எதிரான ஜோதிராதித்ய சிந்தியாவின் கலகத்துக்கு பா.ஜ.க. ஒப்புதல் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த காங்கிரசின் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், முதல்வர் கமல் நாத்துக்கும் பல மாதங்களாக கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று சிந்தியா திடீரென தனது காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்

சிந்தியாவின் கலகத்துக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிந்தியாவுக்கு ஆதரவு அளிக்க பா.ஜ.க. முடிவு செய்தததாகவும் தகவல். ஜே.பி. நட்டா மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகானும் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அப்போது அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க. தலைவர்களிடம் மத்திய பிரதேசத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், முதல்வர் கமல் நாத்துக்கு எதிராக சிந்தியா மற்றும் அவரது எம்.எல்.ஏ.க்களின் கலகம் குறித்தும் அவர்களிடம் தெளிவாக விளக்கியுள்ளார்.

மோடி, சிந்தியா, அமித் ஷா

இந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிந்தியா பா.ஜ.க.வுக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் பிறகே நேற்று சிந்தியா மத்திய உள்துறை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின் காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சிந்தியாவின் அனைத்து அசைவுகளிலும் பா.ஜ.க. இருந்ததாக கூறப்படுகிறது.