ஜே.என்.யு. வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளை நெருங்கிய போலீசார்… போலீஸ் வலையில் பெண் உள்பட 3 பேர்

 

ஜே.என்.யு. வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளை நெருங்கிய போலீசார்… போலீஸ் வலையில் பெண் உள்பட 3 பேர்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) வளாகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளை போலீசர் நெருங்கி விட்டதாகவும், பெண் உள்பட 3 பேர் போலீஸ் வலையில் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் ஜே.என்.யு. வளாகத்துக்குள் கைககளில் இரும்பு கம்பி, கம்புகளுடன்  முகமூடி அணிந்த 50 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. வளாகத்துக்குள் இருந்த விடுதிக்கு சென்ற கும்பல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை கடுமையாக தாக்கியது. மேலும் அந்த பகுதிகளில் இருந்த கார்களையும் சேதப்படுத்தியது. தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதை அறிந்த அந்த கும்பல் உடனடியாக தப்பியோடி விட்டது.

மாணவர்கள் போராட்டம்

ஜே.என்.யு. வளாகத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இதனை கண்டித்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடைபெற்றது. ஜே.என்.யு. வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை போலீசார் விரைவில் முடித்து விடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி போலீசார்

ஜே.என்.யு. வளாகத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த நபர்களில் பெண் உள்பட 3 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய 3 பேரும் அந்த பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. வன்முறை நிகழ்ந்த நேரத்தில், அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த மொத்த மொபைல் எண்கள் பட்டியலிருந்தும், அவர்களின் அழைப்பு விவரங்கள் பதிவு பகுப்பாய்விலிருந்தும்  அந்த 3 பேரின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களுடன் அவர்களை வழிநடத்தி ஒரு சில உள்நபர்களின் பங்கையும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஜே.என்.யு. வன்முறை வழக்கை டெல்லி போலீசார் விரைவில் முடிவுக்கு வந்து விடுவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து போலீசார் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.