ஜெ. மரண சர்ச்சை: மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!

 

ஜெ. மரண சர்ச்சை: மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!

ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என ஆறுமகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் கொடுக்க தம்பிதுரை தயாரா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என ஆறுமகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் கொடுக்க தயாரா என தம்பிதுரைக்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்திருப்பதாக அன்று முதல் இன்று வரை பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் பொருட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. 

jaya

இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்றும், திமுக தொடங்கிய ஊழல் வழக்கினால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் ஜெ. மறைந்ததாகவும் பேசியிருந்தார்.

முன்னதாக, 1991-1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, அடுத்த அமைந்த திமுக ஆட்சி, ஜெ. மீது ஊழல் வழக்குகளை தொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்குகளில் ஒன்றான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பினால், ஜெ. முதல்வர் பதவியை இழந்ததும் வரலாறு.

jaya

இந்நிலையில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, “அம்மா” என்றும்; “தாயே” என்றும் நடித்து, அவரை ஏமாற்றி பிழைத்து வந்தவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க சார்பில் அவருக்கு ஒரு சிலை அமைத்தனர். ஆனால், அச்சிலை ஜெயலலிதா உருவமாக இல்லாமல், முதல்வர் எடப்பாடியின் உறவினர் மாதிரி இருந்ததாக, ஊடகங்கள் பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் கேலி செய்தன.

மேலும், ஒவ்வொரு நாளும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஒவ்வொரு விசித்திரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 75 நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டதாக செய்தி உலா வருகிறது.

rs bharathi

தம்பிதுரைக்கு தெம்பும் திராணியும் இருக்குமேயானால், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில், ‘ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம்’ என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? அவ்வாறு அவர் தாக்கல் செய்தால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் ஊடகத்தினருக்கு தம்பிதுரை அளித்த பேட்டி குறித்து திமுக சார்பில் குறுக்கு விசாரணை செய்து, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என காட்டமாக கூறியுள்ளார்.