ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

 

ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என் சாதனைகள் குறித்து கேள்வி கேட்க கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மறைமுகமாக சரத் பவார் தாக்கி பேசினார்.

மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தீவிர தேர்தல் பணியில் களம் இறங்கி விட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநிலத்தின் சோலப்பூரில் பா.ஜ. சார்பில் மிகப்பெரிய கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார் அப்போது அவர் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை கடுமையாக தாக்கி பேசினார். மகாராஷ்டிராவுக்கு அவருடைய பங்களிப்பு என்ன? என கேள்வி கேட்டு இருந்தார்.

அமித் ஷா

இந்நிலையில் சோலாபூரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவார் பேசுகையில் அமித் ஷாவை பெயரை குறிப்பிடாமல் தாக்கி பேசினார். அவர் கூறியதாவது: சரத் பவார் என்ன செய்தார் என்று அந்த கட்சியை (பா.ஜ.) சேர்ந்த ஒரு தலைவர் கேள்வி கேட்டு இருந்தார். நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நல்லதோ அல்லது கெட்டதோ எந்த விஷயத்துக்காகவும் சரத்பவார் சிறைக்கு போனதில்லை. பல மாதங்கள் ஜெயிலில் இருந்தவர்கள் கேட்கிறார்கள் நான் என்ன செய்தேன் என்று. நான் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது ரூ.75 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.ஐ.

2010ல் சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், சி.பி.ஐ.யால் அமித் ஷா கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அந்த வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதனை மறைமுகமாக குறிப்பிட்டுதான் சிறைக்கு போனவங்க என் சாதனை பற்றி கேள்வி கூடாது என சரத் பவார் தெரிவித்தார்.