ஜெயலலிதா நினைவு நாள்; அதிமுக, அமமுக அமைதி பேரணி

 

ஜெயலலிதா நினைவு நாள்; அதிமுக, அமமுக அமைதி பேரணி

ஜெயலலிதாவின்  இரண்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுவதால் அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் மெரினா நோக்கி அமைதி பேரணி செல்கின்றனர்.

சென்னை: ஜெயலலிதாவின்  இரண்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுவதால் அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் மெரினா நோக்கி அமைதி பேரணி செல்கின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு அதிமுகவினரிடையே இன்றளவும் சோகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் சூழலும், அதிமுகவின் சூழலும் காணாத காட்சிகள கண்டு வருகின்றன.

முதலில் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் பிறகு எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்தார். அதன் பிறகு சசிகலா, டிடிவி தினகரன் கட்சியைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதனையடுத்து தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நாங்கள்தான் உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் என கூறி வருகிறார். எனவே அடிமட்ட ஜெயலலிதா தொண்டர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பக்கம் நிற்பதா இல்லை டிடிவி தினகரன் பக்கம் நிற்பதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து காலை அமைதி ஊர்வலம் புறப்பட இருக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதேபோல் தினகரனின் அமமுக கட்சியும் இன்று காலை தனது அமைதி பேரணியை தொடங்குகின்றனர். மோதல் ஏதேனும் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.