ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் தடை இல்லை-உயர் நீதிமன்றம்

 

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் தடை இல்லை-உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு வரும் இந்த நினைவிடம் வருகிற மார்ச் மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டப்படுவது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்தார்.

கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்பட்டு வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த அவர், நினைவிடம் அமைக்கும் பணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் ஜெயலலிதாவை கர்நாடக நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், அம்மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டுக் காலத்தில் அவர் உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது. எனவே, இன்றைய தேதியில் அவர் குற்றவாளி இல்லை என்பதால், அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாக வாதிட்டார்.

மேலும், மாநிலக் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் வாதிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி, ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.